Wednesday, December 30, 2009
(காதல் + காமம்) சில நொடிகள் மட்டும்
மூடித் திறந்த என் தனிமை அறைக்குள்
பெண்ணுருவில் நுழைந்தது ஒரு தென்றல்..!
பதறவைக்கும் அழகு இல்லையென்றாலும்,
பார்க்கவைக்கும் அழகு..!
மேலிருந்து கீழ், கீழிருந்து மேல்,
இடமிருந்து வலம், வலமிருந்து இடம் என
அவள் மீது
குறுக்கெழுத்துப் போட்டியை நடத்தின என் கண்கள்..!
என் தனிமைகளை இனிமையாக்க
இவள் தான்
ஆண்டவன் படைத்த படைப்போ..,
எனும் என் எண்ணத்தை
முகம் நோக்கி உணர்ந்தவளாய்
என் அருகே நகர்ந்தவள்..,
என் கரம் பிடித்திழுத்து,
இறுக்கி கட்டியணைத்தாள்..!
கண்கள் மூடியபடி நான்
மேலே பறக்க ஆரம்பித்தேன்..!
குறுக்கெழுத்துப் போட்டி கட்டங்களில் பதிலாய்
என் முகத்தில் முத்தங்களை நிரப்பினாள்..!
திடீரென்று ஒரு சத்தம்
எனை யாரோ உலுக்கியது போலிருக்க
கண்களை திறந்தேன் - அவள் என்
எதிரிலே தான் நின்றுகொண்டிருந்தாள்..!
அத்தனையும் கனவா என்று
என்னிலை அறிகையில்,
மீண்டும் தயாரானவள் - திறந்துவிட்டிருந்த
மின்தூக்கிக் கதவுகள் வழியே வெளியேறிவிட்டாள்..!
காதலோ,
காமமோ,
என்ன கருமமோ,
அத்தனையும் கற்பனையே
என்றுணர்த்தியவள் சட்டென்று மறைந்துபோக,
மூடப்பட்ட கதவுகளுடன்
மீண்டும் தொடர்கிறேன்
என் தனிமைப் பயணத்தை..!
சரி சரி, வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு 'ஒட்டு' போட்டுட்டு போயிடுங்க..!
Thursday, December 24, 2009
காதல் இறந்த காலம்
மழையினில்
நனைகையில் அழுதுகொண்டு..,
மதுவிலும் புகையிலும் மனத்தைவிட்டு
உன்
முகத்தினை நொடியினில் மறந்துவிட்டு..,
உன்
கூந்தல் கோதிய கரங்களால்
தாடியை மட்டும் தடவிக்கொண்டு..,
உன்
இதழ்கள் சுவைத்த இதழ்களால்
நித்தம் உன்னை இகழ்ந்துகொண்டு..,
அணைக்கையில்
நொறுங்கிய எலும்புகளின்
ரணத்தினை மார்பினில் சுமந்துகொண்டு..,
விதியோ விதியின் சதியோ
என
கவிதைகள் பல கிறுக்கிக்கொண்டு..,
காலனின் கரங்களில்
என்
காதலை தந்துவிட்டு..,
உருகும் மெழுகாய்
உதிரும் இலையாய்
கரையும் பனியாய்
கலையும் மேகமாய்..,
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ..?
காதலி,
எனை நீ மறுத்ததும்
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ..?!
Tuesday, December 22, 2009
அவதார் 2 : இரண்டாம் பாகம்
புகைப்படங்களைப் பார்த்துவிட்டு நீங்களே முடிவு செய்யுங்கள்...!
|
|
|
|
|
|
V
|
|
|
|
|
|
|
V
|
|
|
|
|
|
|
|
V
டிஸ்கி : இவை இரண்டும் எனக்கு மெயிலில் வந்த படங்கள். இதை தயாரித்தவர்களின் திறமையை பாராட்டுகிறேன். மற்றபடி நகைச்சுவைக்காக மட்டுமே இப்பதிவு..!
சரி சரி, வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு 'ஒட்டு' போட்டுட்டு போயிடுங்க..!
Friday, December 18, 2009
வேட்டைக்காரன் (2009) - விமர்சனம்
வழக்கம் போல் இதிலும் நம் இளைய தளபதி அக்கிரமம் செய்பவர்களுக்கு எதிராக ஆயுதம் தூக்குகிறார். பெரிய போலீஸ் ஆகும் கனவுடன் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வருகிறார் 'போலீஸ்' ரவி என்று அழைக்கப்படும் விஜய். வழியில் ரயில்வே ஸ்டேஷனில் அனுஷ்காவை சந்திக்க, பத்திக்கொள்கிறது காதல். என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டான அப்போதைய அசிஸ்டன்ட் கமிஷனர் தான் அவருடைய ரோல் மாடல். அதற்காக அவரைப்போலவே ஆட்டோ ஒட்டிக்கொண்டு அவர் படித்த கல்லூரியிலேயே படிக்கிறார். அங்கே அவருக்கு ஒரு தோழி அமைய, படித்துக்கொண்டே அனுஷ்கா மீதான தான் ஒருதலைக் காதலையும் காமெடியுடன் கண்டின்யு பண்ணுகிறார். காதல் கைகூடி ஒரு டூயட் முடிந்தவுடன், தன் தோழிக்கு வரும் பிரச்னையை தன் கையில் எடுக்கிறார் விஜய். தோழியை சீண்டிய செல்லா என்கிற தாதாவை அவர் ஏரியாவுகுள்ளேயே சென்று பந்தாட, ஆரம்பிக்கிறது பிரச்சனை. தற்போதைய A.C யான ஷாயாஜி ஷிண்டே செல்லாவின் கையால் என்பதால் விஜய் கைது செய்யப்பட்டு பிறகு போலி என்கவுன்ட்டர் செய்ய அழைத்துச்செல்லப்படுகிறார். அவரின் ரோல் மாடலான IPS அதிகாரியை அனுஷ்கா சந்தித்து உதவி கோர, அவர் மறுத்துவிடுகிறார். தன் போலீஸ் கனவு, படிப்பு அனைத்தும் கானல் நீராகப் போய்விட்டதால், வருத்தம் மற்றும் கோபத்துடன் அவர்களிடமிருந்து தப்பிக்கிறார் விஜய். இடைவேளை.
நேராக அவரின் ரோல் மாடல் IPS அதிகாரியை சென்று சந்திக்க, அவர் தன்னால் உதவ முடியாத நிலையை ஒரு பிளாஷ்பேக்கோடு விஜயிடம் சொல்லுகிறார். அதற்கு காரணம் செல்லாவின் தந்தையும், பெரிய தொழிலதிபருமான தேவநாயகம், இவர் வேறு யாருமல்ல 'சின்ன கவுண்டர்' வில்லன் தான். பின் விஜய் தேவநாயகத்தை சந்திக்க, அவர் விஜய்யை தன்னுடனேயே இருந்துகொல்லுமாறு கூறி, ஒரு சாதாரண டீ கடையில் வேலைசெய்த தான் தொழிலதிபராக மாறியதற்கான அந்த ஒற்றை மந்திரத்தைக் கூறுகிறார். அதையே கடைப்பிடித்து, போலீஸ் ஆசையுடன் இருந்த விஜய் வேட்டைக்காரனாக அவதாரமெடுத்து எதிரிகளை துவம்சம் செய்கிறார். ஒருவர் மாற்றி ஒருவர் பழிவாங்கிக்கொள்ள, இறுதியில் அந்தக் கூட்டத்தை எப்படி வேரோடு அழிக்கிறார் என்பது தான் மீதி படமும், கிளைமாக்ஸும்.
தமிழ் சினிமாவிற்கும், விஜய்க்கும், நமக்கும் மிகவும் பழக்கப்பட்ட அதே கதை தான். முதல் பாதி காமெடியாகவும், இரண்டாம் பாதி அதிரடியாகவும் செல்கிறது. விஜய்யின் நடிப்பு, நடனம், காமெடி, ஆக்க்ஷன் அனைத்தும் ஓகே. ஆங்காங்கே சிதறியிருக்கிறது கொஞ்சம் அதிகப்படியான வசனங்கள். ரஜினி போல் ஒரு ஸ்டைலும் செய்கிறார். அனுஷ்கா பற்றி சொல்ல 'அழகு' என்பதை தவிர வேறொன்றும் இல்லை. அங்கங்கே வந்து தலைகாட்டிவிட்டு, ஆடிவிட்டு, நான் தான் இப்படத்தின் ஹீரோயின் என்று நமக்கு நினைவூட்டிவிட்டு ஓடிவிடுகிறார். விஜய்ஆண்டனியின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகிவிட்டது. 'நான் அடிச்சா' பாடலில் ஜூனியர் விஜய்யும் வந்து பாடி நடனமாடுகிறார். 'புலி உறுமுது' நல்ல டெம்போ. 'உச்சி மண்டையில்' நமக்கு விருந்து. பின்னணி இசை பற்றி நான் அதிகம் கவனிக்கவில்லை, ஆனால் பரவாயில்லை. காமெடிக்கு சத்யனும், தாம் தூம் படத்தில் 'சின்னது' வாக காமெடி செய்தவரும். அதிகம் வேலையில்லை. சண்டை காட்சிகள் சில இடங்களில் கொஞ்சம் ஓவராக இருந்தாலும், நன்றாக அமைத்துள்ளார் கனல் கண்ணன்.
கதை பழையதாக இருந்தாலும் திரைக்கதையை விஜய்கென்றே விறுவிறுப்பாக அமைத்துள்ளார் இயக்குனர் பாபு சிவன். இன்னும் கொஞ்சம் விஷயம் இருந்தால் பீல்டில் நிலைக்கலாம். உலக சினிமா மட்டுமே பார்க்கும் ரசிகர்களுக்கு விஜய்யின் 'வேட்டைக்காரன்' மேலும் ஒரு குப்பையாகத் தெரியலாம், ஆனால் விஜய் ரசிகர்களுக்கு நல்ல விருந்து. மற்றவர்களுக்கு என்னால் சொல்லமுடிந்தது 'வில்லு, குருவி' அளவிற்கெல்லாம் படம் மோசமில்லை.
டிஸ்கி : படம் உங்களுக்கு பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ, விஜய் என்கிற தனிமனிதனை மட்டும் காரணமாக்கி அவரையும் அவர் ரசிகர்களையும் வம்புக்கு இழுக்காதீர்கள்.
வேட்டைக்காரன் : புதிய டப்பாவில் அதே மசாலா...!
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு 'ஒட்டு' போட்டுட்டு போயிடுங்க..!
Thursday, December 17, 2009
AVATAR (2009) - விமர்சனம்
கனிம வளத்திற்காக 'பண்டோரா' எனப்படும் கிரகத்தில் சென்றிறங்கும் மனிதர்கள் அங்கே வாழும் 'நவி' என்றழைக்கப்படும் அந்த கிரகவாசிகளை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நவிக்களை பற்றி நடக்கும் ஆராய்ச்சியில் பங்கேற்க வருகிறார் ஹீரோ Jake. இடுப்புக்குக் கீழே செயலிழந்துவிட்ட நிலையில் Jake ஒரு நவியின் உடலில் புகுத்தப்படுகிறார். அதன் மூலம் அவரால் நவிகளின் கூட்டத்தில் கலக்க முடிகிறது. உண்மை தெரியாமல் அதற்கு உதவுபவர், நவிகள் தலைவரின் மகள் Neytiri. இறுதியில் இவர்களுக்குள் காதல் உருவாக, அப்போது வருகிறது ஒரு பிரச்சனை. மனிதர் படைகளின் தலைவர் Colonal Miles நவிக்களின் இருப்பிடத்தை தாக்க, அவர்களைக் காப்பாற்ற முடியாத நிலையில் Jake தவிக்கிறார். பிறகு Miles, நவிகள் பற்றிய ஆராய்ச்சிக்கு தடை விதித்து நவிகளை அழிக்க முடிவிடுக்கிறார். இந்நிலையில் Jake எடுக்கும் முடிவு என்ன..? மனிதர்களுக்கும் நவிக்களுக்குமான யுத்தத்தில் வென்றது யார்..? அதுவரை மனிதனாகவும், நவியாகவும் வாழ்ந்த Jake இறுதில் என்னவாக ஆகிறார் என்பதை பிரமாண்டமாக, அதாவது மிக பிரமாண்டமாக 3D திரையில் நம் முன்னே காட்டுகிறார் இயக்குனர்.
எங்கு சென்றாலும், அழிக்க மட்டுமே தெரிந்த மனிதர்களிடமிருந்து இயலாதவர்களை காக்கும் ஒரு மனிதனும், அவன் காதலும் தான் கதை என்றாலும், அதை நம் கண் முன்னே காட்டிய விதம் தான் மற்றவர்களுக்கும், James Cameron க்கும் உள்ள வித்தியாசம். ஒரு நொடி கூட பூமியைக் காட்டாமல் 'பண்டோரா' கிரகத்திலேயே ஆரம்பித்து, அங்கேயே முடிகிறது படம். படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் நம்மால் பார்க்கமுடிவது பிரமாண்டம் மட்டுமே. அதன் பின்னணியில் இருப்பது இயக்குனரின் சிந்தனையும், அதை தொழில்நுட்பத்தில் புகுத்திய விஷுவல் எபெக்ட் டீமும் மட்டுமே.
நவிக்களின் உருவ அமைப்பு, மரங்களின் தன்மை, விலங்குகளின் அமைப்பு, வர்ண ஜாலங்கள், மனிதர்களின் விமானங்கள் என அனைத்திலும் இயக்குனரின் கற்பனை கட்டுக்கடங்காமல் சென்றுள்ளது. விலங்குகள் மற்றும் மரங்களுடன் நவிக்கள் வைத்துக்கொள்ளும் நேரடித் தொடர்பு மிக வித்தியாசமான சிந்தனை. காணும் இடமெங்கும் இருளில் ஒளிரும் மரங்கள், செடி கொடிகள், அதைச்சுற்றி மிதக்கும் மலைகள், உயரமான அழகான அருவிகள். அனைத்துமே கண்களுக்கு குளிர்ச்சியான விருந்து. நமது பூமியும் ஒருகாலத்தில் இப்படித்தான் இருந்திருக்குமோ என்று வியக்கத்தோன்றுகிறது. அதுபோல் அந்த காட்டில் வசிக்கும் வித்தியாசமான மிருகங்கள், பூச்சிகள், டிராகன்கள் என அத்தனையும் வித்தியாசமான வடிவமைப்பு. குறிப்பாக டிராகன்களின் வர்ணக்கலவை, மிக அருமை. நொடிக்கொருமுறை மாறும் நவிக்களின் முக பாவனைகளை மிகச்சரியாக நிகழ்த்திக்காட்டிய விஷுவல் எபெக்ட் டீமுக்கு ஒரு பெரிய அப்ளாஸ்.
கொடிய மிருகத்திடம் இருந்து Jake தப்பும் காட்சி, காட்டின் அழகு, டிராகனை அடக்கும் காட்சி, நவிக்களின் இருப்பிடம் அழிக்கப்படும் காட்சி, Jake டிராகனில் பறப்பது, மனிதர்களின் படைபலம், இறுதிப் போர் என அனைத்து இடங்களிலும் ஒளிப்பதிவு நம்மை மிரட்டுகிறது. இறுதி சண்டையில் நம்மையும் ஒரு நவியாகவே பாவித்து டிராகனில் பறக்க ஆரம்பித்துவிடுகிறோம் நம்மை அறியாமலே. இதுவே ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த வெற்றி. அதுபோல், பண்டோரா கிரகத்தின் அழகு, Jake மற்றும் Neytiri யின் காதல், நவிக்களின் எழுச்சி, வீழ்ச்சி, Miles மற்றும் படையினரின் அட்டகாசம் அனைத்தையும் தன் இசையால் உணர்த்துகிறார் இப்படத்தின் இசையமைப்பாளர் James Horner. நம் செவிகளை பதம் பார்க்காத இசைக்கோர்ப்பு.
நடிப்பில் Jake Sully யாக வரும் Sam Worthington, Neytiri யாக வரும் Zoe Saldana, Miles ஆக வரும் Stephen Lang இவர்களுக்கு மட்டுமே அதிக வாய்ப்பு. தவறவிடவில்லை. டெக்னிக்கலாக இப்படத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் பற்றி எனக்கு அவ்வளவாக எழுத தெரியாவிட்டாலும், படம் பார்க்கும்போது உணர முடிந்தவற்றை மட்டுமே இங்கு சொல்லியிருக்கிறேன். மற்றபடி அதைப்பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள ஹாலிவுட்பாலா வின் பதிவிற்காக உங்களைப்போல் நானும் காத்திருக்கிறேன். கண்டிப்பாக படம் பாருங்கள், முடிந்தால் 3D யில்.
AVATAR : நாம் கொடுத்த காசிற்கு இரண்டு மடங்கு அதிசயம் திரையில்.
IMDB Rating : 8.3/10 (நாளைக்கு தான் படம் world wide ரிலீஸ். இப்போவே இவ்ளோ..!)
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு 'ஒட்டு' போட்டுட்டு போயிடுங்க..!
Lock, Stock and Two Smoking Barrels - விமர்சனம்
Bacon, Soap, Tom and Eddie நால்வரும் நண்பர்கள். நிறைய பணம் சம்பாதிக்கும் ஆசையில், சீட்டு விளையாட்டில் சூரப்புலியான Eddie அந்த ஊர் தாதா Harry யிடம் மோதி, அவரின் மர்ம வலையில் சிக்கிவிடுகிறார். ஒரு வாரத்துக்குள் தோற்ற பணம் 500,000 பவுண்டுகளை திருப்பித் தராவிட்டால் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு விரல் வெட்டப்படும், மேலும் Eddie-யின் தந்தையின் Bar அபகரிக்கப்படும். அதை தடுக்க இந்த நால்வர் கூட்டணி என்ன செய்கிறது..?
Barry, இவர் Harry-யின் உதவியாளர். Harry ஒரு வீட்டில் உள்ள பெட்டியை திருடிக்கொண்டு வரச்சொல்ல, அவர் அந்த பொறுப்பை இரண்டு சிறிய திருடர்களிடம் ஒப்படைக்கிறார். பெட்டிக்குள் இருக்கும் பொருள்கள் Barry-க்கு, மற்றவை அவர்களுக்கே. இதுதான் டீல். அதில் சின்ன குளறுபடி நடக்க, பிறகுதான் தெரிகிறது அவர்கள் இருவரும் Harry-க்காகத்தான் இந்த வேலையை செய்கிறார்கள் என்பது. இருவரும் Harry-யால் மிரட்டப்பட, இழந்த பொருளை மீட்டுக் கொண்டுவர இந்த இருவரும் என்ன செய்கிறார்கள்..?
Charles, Willie, Winston Gloriya இவர்கள் தங்கள் வீட்டுக்குள்ளேயே கைத்தொழில் ஒன்றை செய்து வெளியே விற்கும் கும்பல். அதாவது கஞ்சா செடியை தங்கள் வீட்டுக்குள்ளேயே வளர்த்து, அதன் மூலம் போதை பொருள் தயாரித்து வெளியே விற்கின்றனர். தற்காப்பாக, வீட்டுக்குள்ளே புதிதாக வருபவர்களுக்கு கூண்டு கட்டி வைத்திருக்கொண்டு, தங்கள் சேவையை தொடர்கின்றனர். அந்த கூண்டுக்குள் வந்து சிக்கும் எலி யார்...?
Rory, அந்த ஊரின் மற்றொரு தாதா. Eddie & Co வின் தேவைக்காக அவர்களின் நண்பர் Nick இந்த கும்பலிடம் உதவி கோர, அவரும் சம்மதிக்கிறார். பிறகுதான் தெரிகிறது அது தன் செலவில் தனக்கே சூனியம் வைத்துக்கொள்ளும் வேலை என்று. இதனால் கோபமடைந்த Rory, Eddie & Co-வை என்ன செய்கிறார்..?
Big Chris, இவர் Harry-யின் ஆஸ்த்தான அடியாள். பணம் கட்ட வேண்டிய நாள் தாண்டிவிட்டால் அதை எப்படியாவது வசூல் செய்து வந்து தர வேண்டியது இவரின் பொறுப்பு. Eddie-யின் அப்பாவை கூட மிரட்டுகிறார். தன் ஒவ்வொரு வசூலுக்கும் தன் மகனையும் அழைத்துச் செல்பவர். Eddie-யிடமிருந்து எப்படி பணம் வசூல் செய்யப் போகிறார்..?
அடுத்தது Dog. இவர் தன் திருட்டு கும்பலுடன் Eddie & Co தங்கியிருக்கும் ப்ளாட்டுக்கு அடுத்த பிளாட்டில் தங்கியிருக்கிறார். ஒரு குறிப்பிட்ட நாளில் மேலே சொன்னவர்களில் ஒருவரின் வீட்டில் கொள்ளையடிக்கச் செல்கிறார்கள். அதன் முடிவில் என்ன ஆனது..?
இறுதியாக Harry. இவர் அந்த ஊரின் Porn King. மற்றவர்களுக்கு பணம் கொடுத்து, பின் வலையில் விழவைப்பது இவரின் திறமை. அதன் பிறகு அதை வேறு விதமாக வசூல் செய்துகொள்ளுவார். இவர் ஆசைப்பட்ட அந்த பொருள் என்ன, ஏன் ஆசைப்பட்டார், இறுதியாக அப்பொருள் சென்று சேர்ந்த இடம் எது...?
இதையெல்லாம் விட ஒரு பெரிய கேள்வி, மேலே குறிப்பிட்டுள்ள அனைவரும் ஒரு கட்டத்தில் தங்களுக்குள் மோதிக்கொண்டால் என்ன ஆகும்..?
இந்த கேள்விகள் அனைத்திற்கும் விடைதான் Lock, Stock and Two Smoking Barrels. படத்தின் முதல் பாதியில் என்ன நடக்கிறது என்று நமக்கு புரியாது. இரண்டாவது பாதியில் என்ன நடக்கிறது என்று படத்தில் நடிப்பவர்களுக்கு புரியாது. ஆனால், அடுத்தடுத்த திருப்பங்களை நாம் உணர்ந்து 'அட' போடும்போது படம் நம்மை விறுவிறுப்பின் உச்சத்தில் 'தொங்கவிட்டு' முடிகிறது.
1998 ஆகஸ்டில் இங்கிலாந்திலும், 1999 மார்ச்சில் அமெரிக்காவிலும் இப்படம் வெளியானது. Bacon ஆக Jason Stathom மற்றும் Big Chris ஆக Vinnie Jones, இருவருக்கும் இதுவே முதல் படம். Eddie ஆக Nick Moran, Harry ஆக P. H. Moriarty. Rory Breaker ஆக Vas Blackwood மற்றும் Diamond Dog ஆக Frank Harper.
படம் முழுக்க நடக்கும் விபரீதங்களுக்கு காரணம் விதி என்றால், அந்த விதிக்கு இன்னொரு பெயர் Guy Ritchie-யின் மூளை. நம்மால் அடுத்த நொடி என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடியாத திரைக்கதை. மற்றபடி வசனங்கள், இசை, நடிப்பு , காமெடி என அனைத்தும் சிறப்பாகவே உள்ளது. இரண்டாம் முறை பார்த்தால் மிகத் தெளிவாக புரியும் கதை என்பதால் தான் இப்படி ஒரு விளக்கமான விமர்சனம். கண்டிப்பாக பாருங்கள், இப்படம் உங்களை வியப்பில் ஆழ்த்தும்.
Lock, Stock and Two Smoking Barrels : நாம் ஒன்று நினைக்க Guy Ritchie ஒன்று நினைப்பார்.
IMDB Rating : 8.1/10
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு 'ஒட்டு' போட்டுட்டு போயிடுங்க..!
Tuesday, December 15, 2009
நானும், நம் நாட்டுப் பிரச்சனையும்
சரி, நம்மளும் இந்நாட்டு குடிமகன் தானே, நாட்டுக்கு ஒரு பிரச்சனைன்னா அது நமக்கும்தானேன்னு எண்ணி களத்துல எறங்க முடிவுபண்ணிட்டேங்க. ரூம் போட்டு யோசிக்கிற அளவுக்கு வசதி இல்லாததுனால, நம்ம ரூமுலயே உக்காந்து, நின்னு, படுத்து, நடந்து, பொறண்டு யோசிச்சதுல ஒரு சில ஐடியா கெடச்சுது. அதபத்தி இங்கே சொல்றேன். படிச்சுட்டு நீங்களும் உங்களோட ஐடியாவ என் கிட்ட பகிர்ந்துக்குங்க.
ஐடியா : 1
ஆந்திரா, தெலுங்கானா ரெண்டையும் பிரிச்சுட்டு அந்த ஹைதராபாத்தை நம்ம தமிழ்நாடு கூட சேர்த்திடலாம்.
ஐடியா : 2
தனி மாநிலம் கேக்காத மாநிலங்கள தேர்ந்தெடுத்து அவங்களுக்கு 'நல்ல பிள்ளை' பட்டம் கொடுக்கலாம். கூடவே சில கோடிகளையும்.
ஐடியா : 3
தனி மாநிலம் கேக்குற கட்சிக்கும் I.S.I., அல் கொய்தாவுக்கும் தொடர்பு இருக்குன்னு ச்சும்மா கெளப்பி விடலாம். அப்புடியே சி.பி.ஐ., விசாரணை, ரேயடுன்னு ட்ராக் மாத்திவிட்டுடலாம்.
ஐடியா : 4
ஐரோப்பாவுல மக்கள் தொகை கம்மியா இருக்கேன்னு பீல் பண்ணுற நாடுகளுக்கு, ப்ராஜெக்ட் அவுட்சோர்ஸ் பண்ற மாதிரி நம்ம நாட்டுல பிரச்சனை பண்ற கட்சிகள், அவங்க சொந்தாக்காரங்க, உடன்பிறப்புகள், 'தொண்டர்கள்' அப்படி இப்படின்னு ஒரு சில கோடி பெற அங்க அனுப்பிடலாம். அங்கே போயும் அரசியல் செஞ்சு போழச்சுக்குவாங்க. (அது அவங்க திறமைய பொறுத்தது).
ஐடியா : 5
அப்பறம், ஒரு படத்துல வடிவேலு தமிழ்நாட்ட அப்டியே கொண்டுபோய் டெல்லி பக்கத்துல வைக்க சொல்லுவாரே, அந்த மாதிரி எங்க ஊரை மட்டும் (அதே காரைக்கால் தான்) தனியா பிரிச்சு அமெரிக்கா கூட செர்த்துவிட்டுடலாம்.
(அப்படியாவது, நான் பக்கத்து ஊருக்கு போய் I'm from America-ன்னு காலர் தூக்கி விட்டுக்குவேன். அமெரிக்கா மாப்பிள்ளைன்னு நிறைய பேர் பொண்ணு குடுப்பாங்க).
இப்போதைக்கு இவ்ளோதாங்க. இனி, உங்களோட ஐடியாவ கொஞ்சம் சீக்கிரமா சொல்லுங்க. எல்லாத்தையும் சேர்த்து மனுவா எழுதி கொடுத்துட்டு சட்டு புட்டுன்னு உண்ணாவிரதத்த ஆரம்பிக்கணும்...! நான் பொய் ரெண்டு ஸ்ப்ளிட் ஏசி ஆர்டர் பண்ணிட்டுவர்றேன்.
---------------------------------------------------------------
பிரிவினையே வேண்டாம் என்பதுதான் என் எண்ணம். மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தும் நகைச்சுவைக்காக மட்டுமே. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை. தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். வடக்கே பாகிஸ்தான், கிழக்கே சீனா இந்த இரு நாடுகளும் நம் நாட்டைக் கூறுபோடத் துடிப்பது போதாதென்று நாமே நம்மைக் கூறுபோட்டுக்கொள்ளத் துடிக்கிறோம். பாவம் மத்திய அரசு. வாழ்க ஜனநாயகம்.
---------------------------------------------------------------
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு 'ஒட்டு' போட்டுட்டு போயிடுங்க..!
Saturday, December 12, 2009
Snatch (2000)
ஜேசன் ஸ்டேதம் மூலமாக கதை ஆரம்பிக்கிறது. ஒரு வாரம் முன்னாள் வரை boxing promoter ஆக இருந்தவர் அதன் பிறகு நடந்த விஷயங்களை கூறுவதாக செல்கிறது படம். எடுத்தவுடனேயே ஒரு சிம்பிளான வைரக் கொள்ளை. பின்னர் அது இடமாற்றம் செய்யப்பட லண்டன் கொண்டுசெல்லப்படுகிறது. அங்கே அந்த வைரத்தை கொள்ளையடிக்க ஒரு லோக்கல் கும்பல். மேலும் லண்டனில் ஒரு boxing சூதாட்ட கும்பல், அதன் தலைவராய் வில்லன். அதற்கு உதவுபவராய் ஜேசன் ஸ்டேதம். குழுவாக வசிக்கும் Irish இனத்தவராக பிராட் பிட். சூதாட்டம் நடக்கும்முன் வேறு ஒரு விஷயமாக ஸ்டேதம் பிராட் பிட்டை சந்திக்க அங்கே ஒரு பிரச்சனை. பின்னர் சூதாட்டம் நடந்ததா, வைரத்திற்கும் சூதாட்ட கும்பலுக்கும் என்ன தொடர்பு, கடைசியில் வைரம் என்ன ஆனது, லோக்கல் கும்பலின் காமெடி, பிராட் பிட்டின் அதிரடி இவை அனைத்தும் படத்தில் பல திருப்பங்களுடன்
இது Guy Ritchie யின் இரண்டாவது படம். இவர் மடோனாவின் மாஜி கணவர் . இவரைப்பற்றி கேள்விப்பட்டிருந்தாலும், நான் பார்த்த முதல் படம் இதுவே. திரைக்கதை, வசனங்கள், மேக்கிங் என அனைத்தும் சிறப்பாகவே உள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மற்றொரு விஷயம், இசை. Turkish, Doug The Head, Boris The Blade, Frankie "Four-Fingers", Bullet Tooth Tony, Brick Top Polford என படத்தில் கேரக்டர்களின் பெயர்களைக்கூட வித்தியாசமாய் அமைத்துள்ளார். ஒரே ஒரு கடினமான விஷயம் படத்தில் வரும் ஸ்லாங்குகள், குறிப்பாக பிராட் பிட் & கோ. Empire magazine 2008-இல் வெளியிட்ட சிறந்த 500 ஆல் டைம் பேவரிட் படங்கள் லிஸ்டில் இதற்கு 466 வது இடம்.
Turkish-ஆக ஜேசன் ஸ்டேதம், Mickey ஆக பிராட் பிட். இவர்கள் தவிர போரிஸ் ஆக Rade Šerbedžija, ஸ்டேதமின் உதவியாளராக Stephen Graham, சூதாட்ட கும்பல் தலைவர் Brick Top Polford ஆக Alan Ford, Bullet Tooth Tony ஆக Mid night meet train புகழ் Vinnie Jones. இவர்கள் அனைவரின் நடிப்பும் அருமை. மேலும் இப்படத்தின் பாதிப்பை நாம் நிறைய தமிழ் படங்களில் பார்க்கமுடியும். உதாரணமாக, ஓரம்போ, கில்லி, சுள்ளான், etc. உங்களை சற்றும் ஏமாற்றாத ஒரு Gangsters மூவி இது.
Snatch : நிறைய தமிழ் டைரக்டர்கள் பார்த்த நல்ல படம்..?!!
IMDB Rating : 8.2/10
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு 'ஒட்டு' போட்டுட்டு போயிடுங்க..!
தனி தெலுங்கானா வேண்டுமா வேண்டாமா..?
தனி தெலுங்கானா வேண்டுமா வேண்டாமா..? இதுதான் இப்போதைக்கு பெரிய தலைவலியாக இருக்கிறது நம் நாட்டிற்கு. ஒருவர் உண்ணாவிரதம் இருந்து போராடினால் தனி மாநிலம் கிடைத்துவிடுமா..? இதுதான் பல அரசியல்வாதிகளின் சிந்தையில் ஓடும் கேள்வி. முழுமையாக ஆராயாமல் பலர் இப்போதே தயாராகிவிட்டனர் போராட..!
சுதந்திரம் வாங்கிய நாளிலிருந்தே இந்த பிரச்சனை உள்ளது. இதற்காக பலர் உயிர்த்தியாகம் செய்திருக்கின்றனர். இத்தனை வருட போராட்டம் தனி மாநில கோரிக்கையாக இல்லாமல் தங்கள் உரிமை மற்றும் நலனுக்கான போராட்டமாக இருந்திருந்தால் ஒருவேளை இவர்கள் பிரச்சனை தீர்ந்திருக்குமோ என்னவோ. ஒரு தனி மனிதர் தன் அரசியல் சக்தியை நிரூபிக்க நாட்டின் இறையாண்மையை குலைக்கும் ஒரு செயலுக்கு தொடக்கம் கொடுத்துவிட்டார். இப்படி நாம் என்ன எண்ணினாலும், கருத்துக்கள் சொன்னாலும், அங்கே வாழும் மக்களுக்குத்தான் இதன் நல்லவை கெட்டவை தெரியும். வருடக்கணக்கில் இன்னல்களை அனுபவிப்பவர்கள் அவர்களே. இத்தனை வருடங்கள் அம்மாநிலத்தை ஆண்ட கட்சிகள் செய்த தவறுகளின் விளைவு இப்போது தனி மாநிலம் கோரி போராட்டம் நடத்துமளவிற்கு வந்துள்ளது. அப்படியே கொடுத்துவிட்டாலும் ஹைதராபாத்திற்காக மீண்டும் ஒரு போராட்டம்.
இப்பிரச்சனை பற்றி எனக்கு முழுமையாக தெரியாது. இருப்பினும் இதன் விளைவுகள் நாட்டிற்கு நன்மை அளிப்பதாக இருக்காது என்றே கருதுகிறேன். இதற்கு முன்னாள் இதுபோன்று போராடி பிரிக்கப்பட்ட மாநிலங்கள் அவர்களுடைய லட்சியங்களை அடைந்துவிட்டனரா என்பது அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம். மீண்டும் மத்திய அரசு அதை அனுமதித்தால் மற்ற மாநிலங்களுக்கு இது ஒரு தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். இப்போதே பத்திற்கும் மேற்பட்ட மாநிலங்கள் பிரிவினை வாதத்தைக் கையிலெடுத்துள்ளன. இதன் முடிவு என்னவாக இருக்கும் என்பதை ஒருமுறை யூகித்துப் பாருங்கள், கட்சிக்கொரு மாநிலம் அல்லது ஜாதிக்கொரு மாநிலம். அவர்களுக்குள் பிரச்சனை வந்தால் மீண்டும் போராட்டம்..! மாநிலங்களின் வளர்ச்சி, மாநில கட்சிகளின் செயல்பாடுகள் இவற்றை அவ்வப்போது மத்திய அரசு கவனித்து, தவறுகள் இருப்பின் அப்போதே 'குட்டி'இருந்தால் இப்படி பிரச்சனைகள் வந்திருக்காது.
சீன ஆக்கிரமிப்பு, இலங்கைத் தமிழர், பாக்கிஸ்தான் தீவிரவாதம், நிதிநிலைமை, உலகம் வெப்பமயமாதல், விலைவாசி, இன்னும் ஏழை நாடு என்ற பெயர் என நமக்கிருக்கும் சவால்களுக்கு தீர்வு காணப்பட வேண்டிய சூழ்நிலையில், அதற்கெல்லாம் முட்டுக்கட்டை போடும் விதமாக இப்பிரச்சனை அமைந்துவிட்டது. வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நாமே இப்படி அடித்துக்கொண்டால் பிற நாடுகளுடன் சமாதானம் பேசுவது எப்படி? அவர்கள் எப்படி நமக்கு விட்டுக்கொடுப்பார்கள்? பிரிவினை என்று வந்துவிட்டாலே அதில் பிரச்சனைகள் தான் அதிகம் என்பதற்கு பாக்கிஸ்தானை விட சிறந்த எடுத்துக்காட்டு எதுவும் இருக்க முடியாது.
தங்களுக்கான உரிமையை கேட்டுப்பெறுவது என்பது ஒவ்வொருவருக்கும் உள்ள ஜனநாயக உரிமை. அதில் தவறேதும் இல்லை. ஆனால் அது நாட்டின் அமைதிக்கோ, ஒற்றுமைக்கோ, முன்னேற்றத்திற்கோ களங்கம் ஏற்படுத்துமானால் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். இத்தனை வருடங்களாக புறக்கணிக்கப்பட்ட மக்கள் போராடத்தான் செய்வார்கள். அதனால் அவர்களின் போராட்டம் தவறு என்று சொல்ல மாட்டேன். ஆனால் அவர்களின் கோரிக்கை தவறானது என்பதே என் எண்ணம். அதை சற்று மாற்றிக்கொண்டார்களேயானால், கட்டாயம் அவர்களின் போராட்டம் வெற்றி பெரும். அது அச்சமூக மக்களின் முன்னேற்றத்திற்கு வித்திடும். இதற்கு மத்திய அரசு எடுக்கும் முடிவைப் பொறுத்தே வருங்காலத்தில் நடக்கவிருக்கும் பிரிவினை வாத போராட்டங்களின் தொடக்கமும், முடிவும் அமையும். சிந்தித்து செயல்படுமா மத்திய அரசு..?
மக்களே / அரசியல்வாதிகளே, ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை எப்போது உணருவீர்கள்..?
குறிப்பு : மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தும் என் தனிப்பட்ட கருத்துக்களே. யார் மனத்தையும் புண்படுத்தும் நோக்கில் கூறப்படவில்லை. குற்றம் குறை இருந்தால் மன்னித்துவிடுங்கள்.
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு 'ஒட்டு' போட்டுட்டு போயிடுங்க..!
Wednesday, December 9, 2009
சில கவிதை(கிறுக்கல்)கள் - 2
என்னுடைய வேண்டுதல்கள் அனைத்தும்
உனக்கானதாகவே இருக்க,
கடவுள் என் எதிரில் தோன்றி
எனக்காக ஏதாவது கேட்க சொன்னார்.
நான் உன்னைக்காட்டியதும்,
பதிலேதும் கூறாமல் மறைந்துவிட்டார்..!
--------------------------------------------
கவிதையென கிறுக்கி
பின் கசக்கி எறிந்த காகிதங்களிலேல்லாம்
தெளிவாய் தெரிந்தது
அவள்மேல் கொண்ட காதல்..!
--------------------------------------------
ஹைக்கூ,
மரபு,
பின்நவீனம்,
என்று
ஏதேதோ சொல்கிறார்கள்
கவிதைகளில் - ஆனால்
எனக்கு தெரிந்ததெல்லாம்
உன் பெயர் மட்டும்தான்..!
--------------------------------------------
எதையாவது எழுத
விரல் துடிக்க,
எல்லாமும் நீயாய்
என் மதி மறைக்க,
உன்னைப்பற்றி மட்டுமே எழுதிவிட்டு
அதைக்
கவிதையென சொல்லித்திரிகிறேன்..!
--------------------------------------------
கண்களை மூடி
இதழ்களைத் திறந்தாள்
அவள் - காதல்..!
இதழ்களை மூடி
கண்களைத் திறந்தேன்
நான் - காமம்..!
--------------------------------------------
உனக்கும் எனக்குமான உறவை
நான் இன்னும்
தேடிக்கொண்டே இருக்கிறேன்
வார்த்தைகளில்..!
--------------------------------------------
Tuesday, December 8, 2009
அறிவு GV -யின் சமூக அக்கறை
குறிப்பிடப்பட்டுள்ள விஷயம் :
இதுபோன்ற சமூக அக்கறை உள்ள நிர்வாகங்களை நாம் பார்ப்பது மிக அரிது. நமக்கென்ன என்று போகும் மனிதர்கள் நிறைந்த இச்சமுதாயத்தில் பிறரின் நலன் மட்டுமின்றி அவர்களின் வாகனங்களின் நலனுக்கும் சேர்த்து அறிவுப்புப் பலகை வைத்துள்ளனர். இவர்களின் சேவை பாராட்டத்தக்கது.
ஆனால் என்னுடைய கேள்விகள் இவைதான் :
- இவர்களின் சமூக அக்கறை அதே கட்டிடத்தில் இன்றுவரை இயல்பாக இயங்கிவரும் 3-4 கடைகளின் நலனையும், அதனுள் இருப்பவர்கள் மற்றும் வரும் வாடிக்கையாளர்களின் நலனையும் கருத்தில் கொள்ளாமல் விட்டுவிட்டது ஏனோ..?
- ஒருவேளை இவையனைத்தும் ஹெல்மெட் கடைகள், அதனால் ஆபத்தின்போது ஹெல்மெட் அணிந்துகொண்டால் உயிர்சேதம் வராது என்று சிந்தித்திருப்பார்களோ?
- அல்லது இவர்களுக்கு அடிபட்டாலோ, இவர்களின் வாகனங்கள் செதமடைந்தாலோ, அதற்கு நிர்வாகம் பொறுப்பேற்றுக்கொண்டு 'ஏதாவது' செய்யுமா?
- அல்லது ' No Parking ' ஆக பார்த்து வண்டியை நிறுத்தும் நம்போன்றவர்களை பயமுறுத்தவா?
எது எப்படியோ, யாருக்கும் எந்த ஆபத்தும் நேராமல் இருந்தால் போதும். கவனிக்குமா அந்த நிர்வாகம்..?
டிஸ்கி :
இதுதான் தன்னலம் கருதாது பொதுநலம் பேணுவதோ?
.
Monday, December 7, 2009
Superhero Movie (2008)
இது spiderman கதை என்று நான் உங்களுக்கு சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆனால் இப்படம் spiderman-ன் நூறு சதவிகித உல்ட்டா. அதாவது அதோட 'லொள்ளு சபா' வெர்ஷன். ஆனா ஹீரோ பெயர் Dragonfly. 2008 இல் வெளியாகி 71 மில்லியன் டாலர்களை அள்ளிய இத்திரைப்படத்தின் டைரக்டர் Craig Mazin. ஹீரோ Drake Bell, ஹீரோயின் Sara Paxton. வில்லன் Christopher McDonald. Leslie Nielsen ஹீரோவின் மாமாவாக வருகிறார்.
முழுக்க முழுக்க spiderman படத்தைக் கலாய்த்திருந்தாலும் அதற்கு ஊறுகாய் போல Batman Begins, X-Men, Fantastic Four என்று அனைத்து சூப்பர் ஹீரோக்களையும் வம்புக்கு இழுத்திருக்கின்றனர். லேப் காட்சி, ஹீரோவின் பெற்றோர் இறப்பது, மாமா சுடப்படுவது, மற்ற ஹீரோக்களை சந்திப்பது, தன் காதலை சொல்லும் காட்சி, தோல்வியில் தாடி 'வைப்பது', வில்லனிடம் மாட்டுவது, கிளைமாக்ஸ் சண்டை என்று ஒரு சீன் விடாமல் ரௌண்டுகட்டி காமெடி பண்ணியிருக்கிறார்கள். நீங்கள் எந்த மூடில் படம் பார்க்க உற்கார்ந்தாலும் சரி, இப்படம் உங்களை கண்டிப்பாக வயிறு வலிக்க சிரிக்கவைக்கும், அதற்கு நான் கேரண்டி.
Superhero Movie : No logic but comedy magic.
IMDB Rating : 4.3/10 ( தான் :-( )
Snatch (2000) - விரைவில்
.
Saturday, December 5, 2009
மடிந்து போன வீரம்
உங்களுக்கு ஒரு கேள்வி : நீங்க கடைசியா உங்கள் வீரத்தைக் காட்டியது எப்போது?
கோபப்பட்டு கத்துவதை கணக்கில் சேர்க்காதீர்கள். அப்படியே அதை வீரம் என்று எடுத்துக்கொண்டாலும் அது அதிக பட்சம் நம் நண்பர்கள், அம்மா, அப்பா, மனைவி அல்லது குழந்தைகள் இவர்களுக்குள்ளேயே அடங்கிவிடுகிறது. உற்சாக பானம் அருந்தும்போது வரும் வீரம் என்பது வேறு. அது கூட, அருந்தும் பானத்தின் அளவைப் பொறுத்து 'அடங்கிவிடுகிறது'. இதை ஏன் கேட்கிறேன் என்றால், சங்க காலத்திலிருந்தே வீரம் என்பது ஆண், பெண் பாகுபாடின்றி தமிழர்களின் ஒரு பண்பாகக் கருதப்பட்டது. ரத்தத்திலே ஊறியது என்றெல்லாம் கூட இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. இன்றளவில் அது நீடிக்கிறதா இல்லை எந்த அளவு உள்ளது என்பதை உணரவே இந்த கேள்வி.
சிறு வயதில் நான் என் கிராமத்தில் சாலையின் குறுக்கே நின்றுகொண்டு லாரி, பஸ் என எதுவந்தாலும் மறிப்பேனாம். அப்பா சொல்லுவார். எனக்கு நினைவில் இல்லை. நினைவு தெரிந்து பள்ளியில் பலருடன் சண்டை போட்டிருக்கிறேன், என்னைவிட சின்னவன், பெரியவன் என்றெல்லாம் யோசிக்காமல். யார் ரொம்ப அடி வாங்குவார்கள் என்பது வேறு விஷயம். ஆனால் பயப்படாமல் சண்டையிட்டிருக்கிறேன். அதற்காக பின்னர் அப்பாவிடமும் அடி வாங்க வேண்டும். கொஞ்சம் வளர்ந்தபின் கல்லூரியில் முதல் வருடம் படிக்கும்போது நண்பனுக்காக மூன்றாம் ஆண்டு மாணவனை எதிர்த்திருக்கிறேன். பின்னால் இறுதி ஆண்டில் சேர்மன் எலக்க்ஷனின் போது எதிர்பார்த்த அளவு பிரச்சனை வரவில்லை. உயர் கல்வி படிக்கும்போது என்னுடைய ஆர்வம் வேறு பக்கம் சென்றுவிட்டது (கண்டிப்பா படிப்பு இல்லீங்ணா). அப்படியும் கடைசி நாளில் நண்பன்(?) ஒருவன் சம்பந்தமே இல்லாமல் ஒரு பிரச்னைக்கு என்னை வம்பிழுக்க, சண்டைபோட்டோம். என்னைப் பொறுத்தவரை இதுதான் நான் என் வீரத்தைக்( :)) ) காட்டிய கடைசி தினம்..!
எனக்குத் தெரிந்து, சிறு வயதில் மட்டுமே வீரம் நம்மைச் சார்ந்து உள்ளது. கல்லூரிகளில் வீரத்தின் அளவுகோல் சற்று மாறுகிறது/கூடுகிறது. அது, கூட வரும் ஆட்களின் எண்ணிக்கை. முதல் அடி கோபத்தில் அடித்துவிட்டாலும் இரண்டாவது அடிக்கு முன் இதைப்பற்றி யோசிக்கவேண்டியிருக்கிறது. இதெல்லாம் கூட கடைசி பெஞ்ச் மாணவர்களின் செய்கைகள் என்று வீரத்தை தரம் பிரித்துவிடுகிறார்கள். ஏன், முதல் பெஞ்ச் மாணவர்கள் சண்டை போட மாட்டார்களா?(ஏனோ, போடுவதில்லை..!). நமக்கெல்லாம் பின்னாளில் வரும் அடக்கமும், பொறுமையும்(?!!) அவர்களுக்கு அப்போதே வந்துவிடும் போல. சரி விடுங்க. கல்லூரிக்குப் பிறகு பெரும்பாலானோர் குடும்பம், வேலை என்று சென்றுவிடுவதால் வீரத்தைக்காட்ட சந்தர்ப்பம் அமையாது போய்விடுகிறது. அப்படியே அமைந்தாலும் அதைத் தவிர்த்துவிடுகின்றார்கள். காரணம் அதேதான், குடும்பம் மற்றும் வேலை. இந்நாட்களில் உடலின் வீரம் அனைத்தும் வாயில் வந்து குவிந்துவிடுகிறது. பேசியே சமாளித்துவிடுகிறோம். திருமணத்திற்குப் பிறகு அந்த வீரமும் குறைந்துவிடுகிறது. சிலர் மட்டுமே வீரர்களாக இருக்க மற்றவர்கள் வீரன் போல் நடிக்கக் கற்றுக்கொள்கின்றனர். அதன் பிறகு அவர்களின் வாரிசுகள் வீரத்தைக் காட்டத்துவங்க, வாழ்க்கையின் சுழற்சியில் இவர்கள் அனைவருமே காணாமல் போய்விடுகின்றனர்.
பிறரை அடிப்பதுதான் வீரமா என்று நீங்கள் கேட்கலாம். அனால் அதுவும் வீரம் தானே. நாம் அடிக்காவிட்டாலும், நம்மை அடிக்க வருபவரைத் தடுக்கும் அளவிற்காவது வீரம் வேண்டுமல்லவா. அதுவே நம்மால் முடியாது என்றால், பழம்பெருமை பேசி என்ன பயன்? சட்டம், தற்காப்பு என்னும் கலை வியாபாரமானது, பயம், ஆர்வமின்மை இவைகள் தான் காரணங்களா..? எது எப்படியோ, மறு கன்னத்தைக் காட்டச்சொல்லி இயேசு சொன்னார். அதிலும் அறைந்தால் என்னிடம் வா என்று சட்டம் சொல்கிறது. திருப்பி அடி என்று யாருமே சொல்லவில்லை. அங்குதான் ஆரம்பித்தோம் நாம் கோழைகளாக மாற...!
டிஸ்கி :
நான் வீரம் என்று குறிப்பிடுவதை தைரியம் என்று கூட எடுத்துக்கொள்ளலாம்.
சீரியசா ஒரு பதிவு போடலாம்னு யோசிச்சதன் பலன் இது. எப்படி இருக்குன்னு சொல்லுங்க.
Thursday, December 3, 2009
சில கவிதை(கிறுக்கல்)கள் -1
-------------------------------
முதல் முறையாக
வெற்றியின் சுவை
கசப்பு..,
எதிரணியில் என்னவள்..!
-------------------------------
கட்டம் கட்டமாய்
ஜன்னல்கள் - அதில்
வட்ட வட்டமாய்
முகங்கள்..,
நவீன பாடசாலை..!
------------------------------
கோடிட்ட இடங்களை
நிரப்பும் மாணவன் போல
அவள் பார்வை படும் இடங்களை
நிரப்ப துடிக்கிறது
என் காதல்..!
--------------------------------
தன் முகம் காண
பிடிக்காமல் தான்
இறைவன்
ஏழைகளை சிரிக்க விடுவதே இல்லை..!
-----------------------------------
நான்கு சுவர்களுக்கு நடுவில்
நாங்கள் கொடுத்துக்கொண்ட முத்தத்திற்கு
நாங்களே சாட்சி இல்லை,
மூடியிருந்தன கண்கள்..!
----------------------------------
நனைவதற்கென்றே பிறந்த குடைகள்
நனையாமல் கடைக்குள்ளே,
நனைந்தபடி வெளியே நான்..!
----------------------------------
Wednesday, December 2, 2009
தமிழ் ஈழம்
தோழர்களே ..,
அங்கே ஆயுதம் ஏந்தி அலையும்
பிணந்தின்னி கழுகுகளுக்கு
நம் தோழர்கள் – சிபி போல்
உடல் வெட்டி தரவில்லை
மாற்றாக
உயிர் விட்டுத் தருகிறார்கள் …!
இந்தியனுக்கு ஒரு பிரச்சனை என்றால்
கேட்க இந்தியா இருக்கிறது - ஆனால்
தமிழனுக்கு ஒரு பிரச்சனை என்றால்
கேட்க யார் இருக்கிறார்
நம்மைவிட்டால்...?
ஒன்றுபடுவோம்...! வென்று தருவோம்...!
வாழ்க தமிழ்..!
வெல்க தமிழ் ஈழம்..!
கனவு ஈடேறுமா தெரியாது. ஆனால் நடந்த வன்முறைக்கு கட்டாயம் காலம் பதில் சொல்லும்..!
அண்ணனின் திருமணம்
அதே நாளில் என் ஆருயிர் நண்பன் லெனின்-ன் திருமணம் காரைக்காலில் சிறப்பாய் நடந்துமுடிந்தது. என்னால் நேரில் சென்று வாழ்த்தமுடியவில்லை என்றாலும் என் வாழ்த்துக்களை பலமுறை அவருக்கு வழங்கியிருக்கிறேன் (அடிகள் மூலமாக). இனி உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன் மச்சான்.
=================================================
அசோக்-சுதா மற்றும் லெனின்-பகுத்தறிவு, மீண்டும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
=================================================
நான் ஒரு வாரமா ஏரியா பக்கம் வராம போனதுக்கு காரணம் சொல்லிட்டேன். இனிமே இப்படி Gap வராம இருக்க முயற்சி செய்கிறேன்.
Tuesday, November 24, 2009
எங்கள் தளபதியும் - உங்கள் ஆசையும்
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
டிஸ்கி :
"தன்வினை தன்னைச் சுடும்னு" பெரியவங்க அன்னைக்கே சொல்லியிருக்காங்க. ஆசைப்பட்டீங்கல்ல..., அனுபவிங்க..!
Monday, November 23, 2009
நான் வாரிய சில்லறை
நான் இருக்கிறது வேளச்செரிலங்க. வெள்ளிக்கிழமை ராத்திரியே என் நண்பன் போன் பண்ணி மச்சான் நைட்டு ஊருக்கு வர்றேன், திருவான்மியூர்ல வந்து பிக் அப் பண்ணிக்குடான்னு சொன்னாங்க. சரிடான்னு சொல்லிட்டு நானும் தூங்கிட்டேன். காலைல வருவான்னு பாத்தா அவன் நைட்டு 1.45 கே உடுக்கை அடிச்சிட்டான். சரின்னு எழுந்திரிச்சு கிளம்பி போனேங்க. போகும்போதே ஒரு லாரிக்காரன் ஹெல்மட் இல்லாமையே இவ்ளோ தைரியமா என் பின்னாடி வர்றியான்னு வயிறெரிஞ்சு ரோட்டுல இருக்குற மண்ணையெல்லாம் வாரி என் மூஞ்சில இறைச்சுகிட்டே முன்னாடி போனான். ஹ்ம், ஹெல்மட்டோட அருமை அப்போ தெரிஞ்சுது. என்னதான் நான் Apache'ல போனாலும் எனக்கு ஊட்டில குதிரை சவாரி பண்ற மாதிரியே இருந்திச்சு. எல்லாம் இந்த ரோட்டோட மகிமை தான்னு உங்களுக்கு சொல்லி தெரியவேண்டியதில்லை. ஒருவழியா நண்பனைக் கூட்டிக்கிட்டு திரும்ப குதிரை சவாரியை கண்ட்டினியு பண்ணினேன்.
நமக்கு பகல்லயே பசுமாடு தெரியாது, இருட்டுல எரும மாடு தெரியவா போகுதுன்னு பொறுமையா தான் ஓட்டிகிட்டு வந்தேன். வர்ற வெள்ளிக்கிழமை அவனுக்கு கல்யாணம், அதைப்பத்தி பேசிக்கிட்டு வந்தேன். என் பைக், நான் தினமும் யூஸ் பண்ணுற இந்த ரோடு ரெண்டுபேர்மேலையும் எனக்கு கொஞ்சம் பாசம் ஜாஸ்த்தி. ஆனா இவங்க ரெண்டுபேருக்கும் என்ன பிரச்சனையோ கடைசில என்ன கவுத்துட்டாங்க. சின்ன பள்ளம்னு நெனச்சு வண்டிய இறக்குனா அது யானையே முழுங்கிடும்போல. அப்பறம் என்ன, குட்டிக்கரனமெல்லாம் அடிக்காம அப்படியே கீழ விழுந்தோம். ஹையா, ரொம்ப அடி படலையேன்னு எழுந்து தலைய தூக்கி பாத்தா ஒரு லாரி பிரேக் அடிச்சு நின்னுது. அப்படியே அப்பீட்டு..! தப்பிச்சோம்டா சாமின்னு அப்டியே வண்டிய எடுத்துக்கிட்டு கொஞ்ச தூரம் வந்த பிறகுதான் அந்த லாரிய திரும்பி பாத்தேன். என்னென்ன திட்டினானோ..? வண்டிய ஓரமா நிறுத்திட்டு ரெண்டுபேரும் மீசைல மண்ணு ஒட்டிருக்கான்னு பாத்தோம், நல்லவேளை வண்டியோட பம்பர்ல தான் ஒட்டியிருந்துது. ரைட் பூட் ரெஸ்ட காணோம். இதோட தப்பிச்சொமேன்னு சிரிச்சுகிட்டே வீடு வந்து சேர்ந்தோம்.
கொஞ்ச நாளாவே இந்த ரோட்டை பத்தி எழுதனும்னு நெனச்சிகிட்டிருந்தேன். ஆனா இப்டி எழுதுவேன்னு நெனைக்கவே இல்லை. கீழ விழுந்திருந்தாலும் இதுவரை இப்படி சில்லறை வாரியதில்லை(கலக்சன் கம்மிதான்). பரவாயில்லை, பெரிய அடி ஏதும் இல்லாம தப்பிச்சொமே..! மத்தவங்களையும் காப்பாத்திடுப்பா ஆண்டவா..!
டிஸ்கி :
நண்பனுக்கு அடி பட்டிருச்சேன்னு அன்னைக்கு கொஞ்சம் பீலிங்க்ஸ் ஆய்டுச்சுங்க, கொஞ்ச நாள்ல கல்யாண மாப்ளை வேற. சாரிடா மச்சான்..!
என்னைக் கவர்ந்த பதிவர்கள்
ஹாலிவுட் பாலா :
முழுக்க முழுக்க ஆங்கில திரைப்படங்கள் பத்தின விமர்சனங்கள் மட்டுமே. என்னுடைய ஆங்கில (சினிமா) அறிவை வளர்த்ததில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. இவரின் முதல் பதிவு வெளியான நாளிலிருந்து இவரின் தீவிர விசிறி நான். இவருடையஎழத்து நடையும், கதையின் கருவை மட்டும் சொல்லி படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டுவதும், அதிலுள்ள டெக்னிகல் விஷயங்களை பிரித்து மேய்வதும் இவரிடம் மட்டுமே உள்ள திறமை. பாரத மாதா கவிதையும், pixar வரலாறும் என்னைக் கவர்ந்தவை.
கேபிள் ஷங்கர் :
இவர் சினிமா துறையிலேயே உள்ளவர். அதனால் அந்த துறையைப் பற்றிய பல விஷயங்களை இவர் பதிவுகள் மூலம் நமக்கு அறிமுகப்படுத்துகிறார். விமர்சனம் என்று வந்துவிட்டால் இவருக்கு மொழி பாகுபாடு கிடையாது. தமிழ், தெலுங்கு,ஹிந்தி, ஆங்கிலம் என பழமொழி விமர்சனங்களைக் காணலாம். இவருடைய விமர்சனம் படித்த பிறகுதான் அந்த படத்தை பார்க்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்பவர்கள் பலர். சமூக கருத்துக்களுக்கும் இவரிடம் பஞ்சம் இருக்காது. கொத்து பரோட்டாவும், நிதர்சன கதைகளும் என்னைக் கவர்ந்தவை. (சமீபத்தில் தனது தந்தையை இழந்து வாடும் கேபிள் ஷங்கருக்கு இப்பதிவின் மூலம் எனது ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்).
இரும்புத்திரை :
"எழுதுவதெல்லாம் நக்கல், நக்கலைத்தவிர வேறொன்றுமில்லை". மிக மிக இயல்பாக வரும் நக்கல் அரவிந்தோட ஸ்பெஷாலிட்டி. யாரையாவது வம்பிளுக்கலன்னா இவருக்கு தூக்கமே வராது போல. இவருடைய சினிமா விமர்சனங்கள் சற்று வித்தியாசமான பார்வையில்இருக்கும். வேற என்ன சொல்றது இவரபத்தி. நம்ம எப்படிப்பட்ட மூட்ல இருந்தாலும் சரி, இவர் ப்ளாக் பக்கம் வந்தோம்னா ஒரே மூடோட தான் திரும்பி போவோம், அது .....! நீங்களே ட்ரை பண்ணி பாருங்க.
வெட்டிப்பயல் :
பெயரிலேயே இருக்கு இவருடைய ப்ளாக்கின் சிறப்பு. சிறந்த பொழுதுபோக்கு வலைத்தளங்களில் இதுவும் ஒன்று. ஆனால் இவருடைய பதிவுகளில் வெட்டிப்பேச்சு மட்டுமின்றி அழகிய கருத்துக்களும் இருக்கும். உங்களுக்கு தமிழ் சிறுகதைகள் மெயிலில் வந்திருந்தால் அது 80% இவருடையதாகத்தான் இருக்கும். இவருடைய மிக அருமையான சிறுகதைகளுக்கென்று தனி ரசிகர் வட்டாரமே உண்டு. கொல்ட்டி, கல்லூரிப்பயணம், தூறல் என அனைத்தும் என்னைக் கவர்ந்தவை. மகளின் சுட்டித்தனத்தில் பிசியாக இருக்கும் இவருக்கு என் வாழ்த்துக்கள். உங்க ப்ளாக்கும் ஒரு குழந்தை மாதிரி தான் வெட்டிப்பயல் சார், அப்பப்போவந்துபோங்க.
ஜொள்ளுப்பேட்டை :
வாயிலிருந்து வரும் வாட்டர் பால்சை ஒரு சொட்டு கூட வேஸ்ட் பண்ணாமல் இவர் ப்ளாக்கில் கொட்டிவிடுகிறார். இவருடைய ஆராய்ச்சி கட்டுரைகள், அறிவுரைகள், டிப்ஸ்கள் என அனைத்தும் ஜொள்ளும் ஜொள்ளு சார்ந்தவையுமே. இந்த ஒரு சொல் மட்டுமே இவரின் அனைத்து பதிவுகளின் கருவும். ஆனால் ஆபாசம் இல்லாமல் எழுதுவது இவரின் சிறப்பு. எப்பவாச்சும் தான் ப்ளாக் பக்கம் வந்துபோறார். கொஞ்சம் அடிக்கடி பேட்டை வாங்க 'ஜொள்ளு' சார். உங்கள் சேவை எங்களுக்கு ரொம்ப தேவை.
கவிதைகளைப் பொறுத்தவரை பிரியன், நிலா ரசிகன், யாத்ரா, வெண்ணிறஇரவுகள் , மண்குதிரை, நந்தாவிளக்கு, நேசமித்ரன் என ஒரு பட்டியலே என்னிடம் உண்டு. அனைவரின் கவிதைகளும் ஒவ்வொரு வகையில் சிறந்தவை.
இவர்கள் தவிர, உண்மைத்தமிழன், வண்ணத்துப்பூச்சியார், அகநாழிகை, சர்வேசன், போஸ்டன் ஸ்ரீராம், அதிஷா, ஐந்தறைப்பெட்டி, கீதப்பிரியன், மச்சான்ஸ் இன்னும் பெயர் குறிப்பிடப்படாத பலருடைய வாசகன் நான். நீண்ட நாட்களாக வலைப்பூ வாசகனாக இருந்தும் இதுவரை யாருக்கும் பின்னூட்டம் இட்டதில்லை (முடியாம தாங்க). இனி கண்டிப்பாக உங்கள் அனைவரையும் சந்திப்பேன் என உறுதி கூறுகிறேன். அனைவரைப்பற்றியும் எழுத ஆவல் இருந்தாலும், நீளம் கருதி இத்தோடு முடித்துக்கொள்கிறேன்.
டிஸ்கி :
இவங்க எல்லாருமே என்ன ஏகலைவன் ஆக்கின(இன்னும் ஆகுலீங்கன்னா..!) துரோணருங்க. அதனால இந்த பதிவு இவங்க அனைவருக்கும் சமர்ப்பணம்.
நான் ரசித்த பாடல்கள் 2009 - விரைவில்.
Friday, November 20, 2009
தேவதைகளின் தேவதை
இவள் : சம்யுக்தா