Saturday, December 12, 2009

தனி தெலுங்கானா வேண்டுமா வேண்டாமா..?


தனி தெலுங்கானா வேண்டுமா வேண்டாமா..? இதுதான் இப்போதைக்கு பெரிய தலைவலியாக இருக்கிறது நம் நாட்டிற்கு. ஒருவர் உண்ணாவிரதம் இருந்து போராடினால் தனி மாநிலம் கிடைத்துவிடுமா..? இதுதான் பல அரசியல்வாதிகளின் சிந்தையில் ஓடும் கேள்வி. முழுமையாக ஆராயாமல் பலர் இப்போதே தயாராகிவிட்டனர் போராட..!


சுதந்திரம் வாங்கிய நாளிலிருந்தே இந்த பிரச்சனை உள்ளது. இதற்காக பலர் உயிர்த்தியாகம் செய்திருக்கின்றனர். இத்தனை வருட போராட்டம் தனி மாநில கோரிக்கையாக இல்லாமல் தங்கள் உரிமை மற்றும் நலனுக்கான போராட்டமாக இருந்திருந்தால் ஒருவேளை இவர்கள் பிரச்சனை தீர்ந்திருக்குமோ என்னவோ. ஒரு தனி மனிதர் தன் அரசியல் சக்தியை நிரூபிக்க நாட்டின் இறையாண்மையை குலைக்கும் ஒரு செயலுக்கு தொடக்கம் கொடுத்துவிட்டார். இப்படி நாம் என்ன எண்ணினாலும், கருத்துக்கள் சொன்னாலும், அங்கே வாழும் மக்களுக்குத்தான் இதன் நல்லவை கெட்டவை தெரியும். வருடக்கணக்கில் இன்னல்களை அனுபவிப்பவர்கள் அவர்களே. இத்தனை வருடங்கள் அம்மாநிலத்தை ஆண்ட கட்சிகள் செய்த தவறுகளின் விளைவு இப்போது தனி மாநிலம் கோரி போராட்டம் நடத்துமளவிற்கு வந்துள்ளது. அப்படியே கொடுத்துவிட்டாலும் ஹைதராபாத்திற்காக மீண்டும் ஒரு போராட்டம்.


இப்பிரச்சனை பற்றி எனக்கு முழுமையாக தெரியாது. இருப்பினும் இதன் விளைவுகள் நாட்டிற்கு நன்மை அளிப்பதாக இருக்காது என்றே கருதுகிறேன். இதற்கு முன்னாள் இதுபோன்று போராடி பிரிக்கப்பட்ட மாநிலங்கள் அவர்களுடைய லட்சியங்களை அடைந்துவிட்டனரா என்பது அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம். மீண்டும் மத்திய அரசு அதை அனுமதித்தால் மற்ற மாநிலங்களுக்கு இது ஒரு தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். இப்போதே பத்திற்கும் மேற்பட்ட மாநிலங்கள் பிரிவினை வாதத்தைக் கையிலெடுத்துள்ளன. இதன் முடிவு என்னவாக இருக்கும் என்பதை ஒருமுறை யூகித்துப் பாருங்கள், கட்சிக்கொரு மாநிலம் அல்லது ஜாதிக்கொரு மாநிலம். அவர்களுக்குள் பிரச்சனை வந்தால் மீண்டும் போராட்டம்..! மாநிலங்களின் வளர்ச்சி, மாநில கட்சிகளின் செயல்பாடுகள் இவற்றை அவ்வப்போது மத்திய அரசு கவனித்து, தவறுகள் இருப்பின் அப்போதே 'குட்டி'இருந்தால் இப்படி பிரச்சனைகள் வந்திருக்காது.


சீன ஆக்கிரமிப்பு, இலங்கைத் தமிழர், பாக்கிஸ்தான் தீவிரவாதம், நிதிநிலைமை, உலகம் வெப்பமயமாதல், விலைவாசி, இன்னும் ஏழை நாடு என்ற பெயர் என நமக்கிருக்கும் சவால்களுக்கு தீர்வு காணப்பட வேண்டிய சூழ்நிலையில், அதற்கெல்லாம் முட்டுக்கட்டை போடும் விதமாக இப்பிரச்சனை அமைந்துவிட்டது. வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நாமே இப்படி அடித்துக்கொண்டால் பிற நாடுகளுடன் சமாதானம் பேசுவது எப்படி? அவர்கள் எப்படி நமக்கு விட்டுக்கொடுப்பார்கள்? பிரிவினை என்று வந்துவிட்டாலே அதில் பிரச்சனைகள் தான் அதிகம் என்பதற்கு பாக்கிஸ்தானை விட சிறந்த எடுத்துக்காட்டு எதுவும் இருக்க முடியாது.


தங்களுக்கான உரிமையை கேட்டுப்பெறுவது என்பது ஒவ்வொருவருக்கும் உள்ள ஜனநாயக உரிமை. அதில் தவறேதும் இல்லை. ஆனால் அது நாட்டின் அமைதிக்கோ, ஒற்றுமைக்கோ, முன்னேற்றத்திற்கோ களங்கம் ஏற்படுத்துமானால் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். இத்தனை வருடங்களாக புறக்கணிக்கப்பட்ட மக்கள் போராடத்தான் செய்வார்கள். அதனால் அவர்களின் போராட்டம் தவறு என்று சொல்ல மாட்டேன். ஆனால் அவர்களின் கோரிக்கை தவறானது என்பதே என் எண்ணம். அதை சற்று மாற்றிக்கொண்டார்களேயானால், கட்டாயம் அவர்களின் போராட்டம் வெற்றி பெரும். அது அச்சமூக மக்களின் முன்னேற்றத்திற்கு வித்திடும். இதற்கு மத்திய அரசு எடுக்கும் முடிவைப் பொறுத்தே வருங்காலத்தில் நடக்கவிருக்கும் பிரிவினை வாத போராட்டங்களின் தொடக்கமும், முடிவும் அமையும். சிந்தித்து செயல்படுமா மத்திய அரசு..?


மக்களே / அரசியல்வாதிகளே, ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை எப்போது உணருவீர்கள்..?


குறிப்பு : மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தும் என் தனிப்பட்ட கருத்துக்களே. யார் மனத்தையும் புண்படுத்தும் நோக்கில் கூறப்படவில்லை. குற்றம் குறை இருந்தால் மன்னித்துவிடுங்கள்.


வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு 'ஒட்டு' போட்டுட்டு போயிடுங்க..!

5 comments:

shaan said...

You have the right to your opinion but we need to consider several factors.
1) When Andhra was formed Telangana was not part of it. Kurnool was Andhra's capital.
2) Later Telanga was forcibly merged with Andhra against the recommendations of the States Reorganisation committee.
3) The Gentleman's agreement which promised a fair share of jobs for the backward region of Telangana was never implemented.
4) Though Krishna and Godavari originate in Telangana it was deprived of a fair share of its waters.
5) There was no development in Telangana though the region has good natural resources.
6) The few industries that were started under the Nizam rule were closed while all development went to Rayalaseema and Andhra.
7) Even Telugu cinema portrays people from Telangana as villains and fools.

As you said they changed their demand from separate statehood to better development and the government under a Gentleman's agreement promised better development but never did what it promised. So they have been pushed to demand separate state again.

அறிவு GV said...

விரிவான கருத்துப் பதிவிற்கு நன்றி ஷான். ஆனால் நீங்கள் புரிந்துள்ள அளவு கூட மற்ற அரசியல் கட்சிகள் புரிந்துகொள்ளவில்லையே. ஆளாளுக்கு தனி மாநிலம் கோருகிறார்கள். இப்போராட்டம் மற்றவர்களுக்கு தவறான எதுத்துக்காட்டாய் போய்விட்டதே என்பது தான் என் வருத்தம். நன்றி ஷான்.

Unknown said...

நீங்கள் சொல்வது போல் நாம் என்ன வேண்டும் என்றாலும் சொல்லி விடலாம் அங்கு இருப்பவனுக்கு தானே தெரியும் அந்த கஷ்டங்கள்...,

ஊர்சுற்றி said...

நல்ல கருத்துகள்தான்.

அறிவு GV said...

அது தான் உண்மை பேநா மூடி.
முதல் வருகைக்கு நன்றி ஊர்சுற்றி. அடிக்கடி வாங்க.

Post a Comment

எண்ணங்களை எழுத்தாக்கினா ஒன்னும் தப்பில்லீங்ணா..!

Related Posts with Thumbnails